Thursday, April 05, 2007

ஒரு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது !

ஏதோ தோன்றியது..
அவளைப் பார்க்க வேண்டும் என்று.
சட்டென்று ஞாபகம் வந்தது..
மாதம் ஒரு முறையேனும்
சந்திக்க வேண்டும் என்ற
பரஸ்பர ஒப்பந்தம்.
வெகு நாட்களாயிற்று
ஒப்பந்தத்தை மீறி..

யார் மீது தவறு.. அது
அவ்வளவு முக்கியமில்லை..
புதுப்பிக்கப் படுவதற்காகவே
ஒப்பந்தங்கள் இருக்கின்றன..

இன்று மாலை அவளை
சந்தித்தே ஆக வேண்டும்..
நினைத்த பொழுதில்
மனதில் ஒரு குதூகலம்..
நரம்புகளில் ஒரு கிளர்ச்சி..

கடற்கரை மணலில் கால் பதித்து
வெகு தூரம் நினைவுகளூடே
நடந்து வழக்கமான இடத்தில்
காத்திருக்க தொடங்கினேன்..

என்னவள் இனிமையானவள்..
நொடிப்பொழுதில் எனை ஈர்த்து
உலகையே மறக்க செய்பவள்..
சில கணங்களில் ஏமாற்றங்களை
பரிசளித்திருந்தாலும் அவள்
மீது மட்டும் கோபமே
வருவதில்லை எனக்கு...

அட... அதோ வந்து விட்டாள்..
அவளின் வட்ட முகமும்
அதன் பிரகாசமும்
அதில் தவழ்ந்த புன்சிரிப்பும்
அவளின் நளினமும், நாணமும்..
இது போதும் எனக்கு..
நிலவிய மௌனத்தை கலைக்காது
அவளை கண்களால்
இதமாக வருடத் தொடங்கினேன்..


ஒப்பந்தம் புதுப்பிக்கப் பட்டது.